Skip to main content

“மீனவர் நலவாரிய அட்டை வழங்க வேண்டும்” - மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Fishermen Workers' Union struggle in Virudhunagar

 

மீனவர் நலவாரியத்தில் விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக நலவாரிய அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் சி.செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

 

மீன் வளத்தையும் மீனவர்களையும் பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். இந்தியாவின் 106 நதிகளையும் கடலையும் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தால் நதி நீரை கடல் நீராக மாற்றக்கூடாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், விவசாயம்,  குடிநீர் போன்ற தேவைகளுக்கு அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையேந்த வைத்துவிட வேண்டாம். கடல் மீனவரைப் போல் புயல் பருவகால சேமிப்பு நிதி,  மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

விருதுநகர் மாவட்ட மீனவத் தொழிலாளர்களில், நலவாரிய அட்டை இருந்தும் விடுபட்டவர்களுக்கு கொரோனா நிவாரணம் உடனே வழங்க வேண்டும். மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.  60 வயதான மீனவத் தொழிலாளர்களுக்கு மீன் வளத்துறை மூலம் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்தில் இயக்கப்படும் மீன் மார்க்கெட்களில் கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி மற்றும் குழந்தைகள் காப்பக வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் மீனவர் நலவாரியத்தில் உடனே பதிவு செய்திட  மீன் வளத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசால் மீனவர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்விநிதி உதவி, திருமண நிதி உதவி, விபத்து மற்றும் இறப்பு நிதி உதவி போன்ற பணப்பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.