Skip to main content

முதல்வர் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

fgj

 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம் அருகே ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மையப்பகுதிகளான ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் மு.க. ஸ்டாலினின் இல்லம் அமைந்துள்ளது. கோட்டூர்புரம் சாலையும் சித்தரஞ்சன் சாலையும் இணையும் இடத்தில் முதல்வரின் வீடு இருப்பதால் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். இதனால் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் வீட்டிற்கு முன்பகுதியில் எப்போதும் இருப்பார்கள். மேலும், முதல்வரை சந்திக்க தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என தொடர்ந்து வீட்டிற்கு வருவதால் பாதுகாப்பில் எந்தக் குறையும் வரக்கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். 

 

இந்நிலையில், இன்று (27.09.2021) காலை முதல்வரின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலைக்கு வந்த 45 வயது நபர் ஒருவர், கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றி தீவைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தை சற்று தூரத்தில் நின்ற போலீசார் பார்த்துவிட, நொடிப்பொழுதில் அவர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் அந்த நபரின் கைகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தென்காசி ஊராட்சி மன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், ஆனால் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கவனித்த அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

 

 

சார்ந்த செய்திகள்