
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே அதிகளவு வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுத்துறை அதிகாரி பேசுவதாகவும் உணவகம் அருகில் இருப்பதாகவும் வாகனத்திற்கு டீசல் போடுவதற்காக கூகுள் மற்றும் ஜி-பேவில் பணம் அனுப்ப வேண்டும் என சண்முகசுந்தரம் என்ற பெயரில் மர்ம நபர் பேசி வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
அதைத் தொடர்ந்து தான் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் பிரியாணி கடை உரிமையாளருக்கு சண்முகசுந்தரம் என்ற செல் நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் உணவுத்துறை அதிகாரி என்றும் உணவகங்களில் சோதனை செய்து வருவதாகவும் தங்களது உணவகம் அருகே நின்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் எதற்காக போன் செய்துள்ளார்கள் என்று கேட்டதற்கு, “நாங்கள் வந்த வாகனத்திற்கு டீசல் நிரப்ப வேண்டும் அதற்காக ஓட்டுநரை அனுப்பி வைக்கிறேன் 500 ரூபாய் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். இதையடுத்து உணவக உரிமையாளர் உணவக சங்கத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர் சங்கத்தின் சார்பில் புகார் மனுவும் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வளம் வரும் போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.