
தென்காசி மாவட்டத்தின் ஆலய நகரமான சங்கரன்கோவிலின் 5வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜா ஆறுமுகம். இவர் அதிமுகவில் இருந்து கவுன்சிலராகி அதன்பின்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திமுகவிற்கு வந்துள்ளார். நகரின் தற்காலிக பேருந்து நிலையம் அருகே கவுன்சிலர் ராஜா சைக்களுக்கான வாகன காப்பகம் நடத்தி வந்தார். ஆனால் உரிய அனுமதியின்றி தி.மு.க. கவுன்சிலர் வாகன காப்பகம் நடத்தி வருவதாக புகார் வந்ததால் நகராட்சி நிர்வாகத்தினர் காப்பக கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.
இதனிடையே அந்த இடத்திற்கு அருகே கவுன்சிலரின் தம்பியான சங்கர் சிக்கன் கடை நடத்தி வந்திருக்கிறார். மேலும் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும் அந்த இடத்தில் டாஸ்மாக் கடைகளும் செயல்பாட்டு வருகிறது. சங்கரின் சிக்கன் கடைக்கு ரம்ஜான்(31.3.2024) அன்று மதியம் மது போதையில் வந்த நான்கு பேர் சிக்கன் 65 உள்ளிட்ட பொறித்த உணவு வகைகளை வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்குகான பணத்தை கொடுக்காமல் 4 பேரும் செல்ல முயன்றனர். அப்போது சங்கர் சிக்கன் 65 வாங்கியதற்கான பணத்தை கேட்டபோது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து கடைக்கு விரைந்து வந்த கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் அவர்களை சமரசம் செய்ய முயன்றிருக்கிறார். ஆனாலும் ஆவேசமான நான்கு பேரும் கடையிலிருந்து பொருட்களை சூறையாடி தடுக்க வந்த கவுன்சிலர் ராஜா ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி விட்டுத் தப்பியோடினர்.
தலையில் படுகாயமடைந்த கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் சங்கரன்கோவில் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சங்கரன்கோவில் போலீசார், தப்பியோடிய 4 பேரில் அந்தப் பகுதியை சேர்ந்த ஆதம் பாவா, ஷேக் அயூப் இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரையும் தேடி வருகின்றனர். கடை சூறையாடப்பட்டு தி.மு.க. கவுன்சிலர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் நகரை பரபரப்பாக்கியுள்ளது.