Skip to main content

“சீமானுக்கு சட்டரீதியாக தண்டனை பெற்றுத் தருவேன்” - டி.ஐ.ஜி. வருண்குமார் உறுதி!

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
DIG varunKumar assured  I will punish Seeman legally

திருச்சி சரக டிஐஜி வீ. வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஆகியோர் குறித்து (இருவரும் எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதாக புகார் எழுந்தது. 

இதுகுறித்து திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில், சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் வருண்குமார் மனுவும் செய்திருந்தார்.

அதில், தனது புகழுக்கு களங்கம் விளைவித்த சீமான் ரூ.2 கோடி தர வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு குறித்து  நீதிமன்றம் விசாரணை நடத்தியதில், முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் அவரின் மனுவை ஏற்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், தனது வழக்கறிஞர் முரளி கிருஷ்ணனுடன்  நீதிபதி பாலாஜி முன்னிலையில் டிஐஜி வருண்குமார் திங்கள்கிழமை(30.12.2024) ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி. வருண் குமார், “திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக நான் இருந்தபோது, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், யூடியூப்பில் 9 பெண்கள் உயிரிழந்ததாகவும், அதைக் கணக்கில் கொண்டு வரவில்லை எனவும் முற்றிலும் தவறான தகவலை தெரிவித்திருந்தார். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மகளிர் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னையாக அமைந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தோம். பிறகு திருச்சிக்கு மாறுதலில் வந்தபின்னரும் அவர்மீது வந்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 2024 ஜூலை 11 ஆம் தேதி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது கட்சி நிர்வாகியை நான் கைது செய்தது தொடர்பாக ஒரு பேட்டியளித்தார்.  அந்த பேட்டியில், என்னைப்பற்றி மிகவும் தரக்குறைவாகவும், தவறாகவும் விமர்சித்திருந்தார். நான் சாதி ரீதியாக செயல்படுவதாகவும், வேண்டுமானால் சட்டையை கழட்டி வைத்துவிட்டு வா எனக் கூறியதுடன், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது கூறியிருந்தார். ஒரு அரசியல் கட்சித் தலைவர், அவரது கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக, காவல்துறை அதிகாரி மீது இப்படி அவதூறு பரப்புவது தவறு. வேறு எந்த அரசியல்வாதியும் இதுபோல செய்ததில்லை. இவர் மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார். 

அதுபோல எனது மனைவி (புதுக்கோட்டை எஸ்பி) மற்றும் குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார். காவல்துறை அதிகாரிகள் மீதே இப்படி அவதூறு பரப்பும் நபர், நமக்கு கீழே பணியாற்றும் ஆய்வாளர்கள்  மற்ற சக காவல்துறையினர் மீது எப்படியெல்லாம் அவதூறு பரப்புவார்...? என எனது மனைவியுடன் கலந்தாலோசித்து இதற்கு முடிவு கட்ட முடிவெடுத்தோம். மைக் முன்பு எதையும் பேசலாம் என பேசி வருகிறார் சீமான். அதற்கு தக்க பாடம் புகட்டவே அவர் மீதும் அவரது கட்சியினர் மீதும் நீதிமன்றம் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு மாதிரி பொய்யாக பேசி வருகிறார். இனிமேல் எதையும் பேசலாம் என அவர் பேசக்கூடாது. அவர் குடும்பத்தை யாராவது பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும், அதை விடுத்து பதிலாக எனது குடும்பத்தை விமர்சிப்பது தவறு. மேலும் நான் இரவு பகலாக கஷ்டப்பட்டு படித்து நேசித்து பெற்ற பதவி இது. இந்த பதவியை விட்டு வெளியே வா, சட்டையை கழட்டி விட்டு வா என்கிறார். அப்படியெல்லாம் அவருக்காக நான் பதவியை விட முடியாது.

நான் ஓய்வு பெற்ற பின்னரும் இது தொடர்பாக வழக்கு நடந்தால் விடமாட்டேன். தொடர்ந்து நடத்தி அவருக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன். இன்று வரையில் எனது குடும்பத்தினரின் மார்பிங் செய்த படங்கள் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் பதிவேற்றியதை நீக்கவில்லை. யாரோ வெளிநாட்டவர் சம்பந்தமில்லாமல் என் மீது கனடாவிலிருந்து பதிவேற்றுகிறார் என்றால் எப்படி...? இவரது தூண்டுதலின் பேரில்தான் அவ்வாறு நடைபெறுகிறது. இவரும் இவரது கட்சியினரும்தான் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர். அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தமைக்காக இதுபோன்று செயல்படுகிறார். அவர் மன்னிப்பு கோருவதாக தொழிலதிபர் ஒருவர் மூலம் தகவல் வந்தது. 

தனிப்பட்ட முறையில் அவர் மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது, பொதுவெளியில் மன்னிப்பு கோரினால் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். நானும் எனது மனைவியும் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அதை கொண்டாடுவதைக் கூட விடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளேன். நீதிமன்றம் மூலமாக சீமானுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தராமல் விடமாட்டேன், இது குற்ற நடவடிக்கை மேலும் சிவில் நடவடிக்கையும் நீதிமன்றம் மூலமாக அவர் மீது எடுக்கப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்