
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அக்ரஹாரம் பஞ்சாயத்து ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பாபு (56). மாற்றுத்திறனாளியான இவர் வளந்தான்கோட்டை அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லாமல், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே பாபு இருந்து வந்தார்.
இந்நிலையில் வீட்டிலிருந்த பாபு திடீரென மாயமானார். இதை அடுத்து உறவினர்கள் பாபுவை பல்வேறு இடங்களில் தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் கொல்லை புறத்தில் உள்ள கிணற்றை எட்டி பார்த்த போது கிணற்றில் பாபு மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாபுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே பாபு இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். பாபு கிணற்றில் தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.