கோடை காலத்தில், அம்மை போன்ற வெப்பகால நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தகைய நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக்கூடாது என்று அஞ்சிய மக்களின் எதிர்பார்ப்பு மழையாக இருந்தது. அந்த வகையில், இயற்கையை வழிபட்டு வந்த மக்கள், மழையை மாரியம்மன் ஆக்கினார்கள். கசப்பு சுவை நிறைந்த வேம்பு மரம், மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் ஆனது. ஆதிசக்தியின் வடிவம் என்று நம்பப்படும் மாரியம்மன் இடத்திற்கு ஏற்றாற்போல், பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோதே, 1780-ல் சிறு பீடம் அமைத்து மாரியம்மனை அங்குள்ள மக்கள் வழிபட ஆரம்பித்தனர். 1859-ல் பீடத்தின் மீது சிலை வைத்தனர். அன்றிலிருந்தே பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது. 1923-ல் இக்கோவிலுக்கு புதிய கட்டடம் கட்டினர். 1933 முதல் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்மாவட்ட கோவில் திருவிழாக்களில், விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, வேப்பமர இலைகளை உடுத்தி, அக்கினிசட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, ரதம் இழுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நகரில் வலம் வருவதை அம்மனுக்கு செலுத்தும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் கருதி வருகின்றனர்.
கடந்த 87 ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான அம்மன் பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா, கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், இந்த வருடம், வீடுகளில் விளக்கு ஏற்றி, அம்மனை வணங்கி பொங்கல் வைத்து வழிபடும் எளிய விழாவானது.

ஆனாலும், தங்களில் ஒருவளாகவே கருதப்பட்டுவரும் ‘மாரியாத்தா’ மீது கொண்ட பாசத்தால், “என்ன ஆத்தா.. இப்படி பண்ணிட்ட.. உன் சன்னதிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாம பண்ணிட்ட.. நீ கோபப்பட்டா நாங்க தாங்க மாட்டோம்.. இந்த கரோனா கூட உன்னோட கோபம்தான். எங்கள மன்னிச்சிரு.. மலைபோல துன்பம் வந்தாலும் பனிபோல விலக்கிருவியே.. மக்களை கொஞ்சம் கருணைக் கண் கொண்டு பார்.. இந்த கரோனாவ இருக்கிற இடம் தெரியாம பண்ணிரு..” என்று அம்மனை மனதில் நிறுத்தி விருதுநகர் மக்கள் வேண்டி வருகின்றனர்.
ஒரு பக்தையோ, ‘ஊரடங்குன்னா கூட்டம் கூடக்கூடாது. அவ்வளவுதானே! ஆத்தாவுக்கு செலுத்த வேண்டிய அக்கினிச்சட்டி நேர்த்திக்கடனை, நான் மட்டும் போயி செலுத்திட்டுப் போறேன்.’ என்று தனி ஒருத்தியாக அக்கினிச்சட்டி ஏந்தி, விருதுநகர் சாலைகளில் வலம் வந்தார். பூட்டப்பட்டிருந்த பராசக்தி மாரியம்மன் கோவிலை அவர் அடைந்ததும், அங்கு ஏற்கனவே வெளியில் நின்றபடி கரோனா அச்சம் குறித்து ஆத்தாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்த பெண்கள், ‘ஆஹோ.. அய்யாஹோ..’ என கோஷம் எழுப்பினர். அக்கினிச்சட்டி பக்தையோ சாமி வந்து ஆடி தரையில் விழுந்து வணங்கினார்.
உனக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்னும் புரிந்துணர்தலே நம்பிக்கை. இது உளவியல் சார்ந்த ஒரு விஷயமாகும். தன் மீதான நம்பிக்கை, இயற்கையின் மீதான நம்பிக்கை, இறை நம்பிக்கை இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எதுவாகினும் பகுத்தறிவதே சரியென்று நம்பும் கொள்கையும்கூட ஒருவித நம்பிக்கைதான். இதைத்தான், வாழ்க்கை என்னும் சக்கரம் சுழல்வதற்கு நம்பிக்கை என்ற அச்சாணி அவசியம் என்கிறார்கள்.