Skip to main content

“50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க உத்தரவு” - தமிழக அரசு தகவல்! 

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
Order to provide 50 lakh set-up boxes TN govt information

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை (HD - High Definition) செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பெற உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் பெற்று பயனடைந்திட கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + ஜி.எஸ்.டி என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது.

உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி 50 இலட்சம் உயர் வரையறை செட்டாப்பாக்ஸ்களை விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இரண்டு இலட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தேவைக்கேற்றவாறு உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்குப் போதுமான செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பில் உள்ளன. உயர் வரையறை செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500 வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்களை பெற்றுப் பயனடையுமாறு அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்று, செயலிழக்க நிலையில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்களைச் செயலாக்கம் செய்யவும், தவறும் பட்சத்தில் அப்பகுதியில் புதிய உள்ளுர் கேபின் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிதாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்