சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் மூழ்கி 5 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் குளத்தில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் சாமி பல்லாக்கை கரையோரம் வைத்துவிட்டுக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் குளிக்க முற்பட்ட நிலையில் 5 பேர் குளத்தில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்ற நிலையில் 5 பேரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சேற்றில் சிக்கித் தத்தளித்து நீரில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குளத்தை மூடிய கோவில் நிர்வாகம் குளத்தில் இறங்குவதற்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் குளத்தின் கேட் பூட்டப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.