Skip to main content

நக்கீரன் வெளிக்காட்டிய மாணவி போரம் சத்தியாவுக்கு பசுமை வீடும், மனநலம் பாதித்த அவரது அம்மாவுக்கு உதவித் தொகைக்கான உத்தரவையும் ஆட்சியர் வழங்கினார்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

The Collector  issued a green house to student Satya and an order for assistance to his mentally ill mother.

    
குடியிருக்க வீடில்லாமல் மண்குடிசையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்துவந்தார் மாணவி போரம் சத்தியா. விவசாய வேலைகள் செய்து குடும்ப பாரத்தைப் போக்கியதுடன் பள்ளிப் படிப்பையும் முடித்துள்ளார் சத்யா. 'தனக்குக் கதவுவச்ச வீடும், படிக்க உதவியும் வேண்டும்' என்ற அவரது கண்ணீர் கோரிக்கையை 'மக்கள் பாதை' மூலம் அறிந்து செப்டம்பர் 3 -ஆம் தேதி நேரில் சென்று அங்குள்ள நிலைகளை 'நக்கீரன்' இணையத்தில் செய்தி மற்றும் வீடியோவாக வெளியிட்டிருந்தோம்.


அதன்பிறகு, அந்த மாணவிக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி, போரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையா - செல்வமணி தம்பதியின் 2 ஆவது மகள் சத்தியா (வயது 18). தந்தை 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒழுங்கான வீடுகூட இல்லாமல் மழையில் கரைந்த மண்சுவறும் மக்கிக் கொட்டிய கீற்றும் உள்ள மண் குடிசையில் மனநலம் பாதித்த தாயோடு வசித்து வந்தார். படிப்புக்காகவும், குடும்ப தேவைக்காகவும் விவசாய வேலை செய்து குடும்ப பாரத்தைப் போக்கிவந்த சத்தியாவைப் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவணத்திற்குக் கொண்டு சென்றோம். 

 

அனைத்தையும் கேட்டவர் உடனடியாக அனைத்து அரசு உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆட்சியரின் உத்தரவாதங்களோடு நக்கீரன் இணையத்தில் செய்தி, வீடியோ வெளியிட்டோம். அடுத்த நாள் 4 ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் போரம் கிராமத்திற்குச் சென்று சத்தியாவின் வீடு இருக்கும் இடத்தை ஆய்வுசெய்து அந்த இடத்திற்கு மனைப்பட்டா வழங்க முடியாது என்பதால், 100 மீட்டர் தூரத்தில் மாற்று இடம் தேர்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார்கள். அன்றே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சத்தியா வீட்டிற்குச் சென்று உணவுப் பொருள் உள்ளிட்ட உதவி செய்துவிட்டு படிப்பிற்காகவும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்காகவும் அனைத்தையும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

 

அதேபோல மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியாவின் தாயாருக்கு ஆலோசனைகள் வழங்கி சிகிச்சைக்காக புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றார். அடுத்தநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மக்கள் பாதை நிர்வாகிகளுடன் சத்தியா ஆட்சியர் அலுவலகம் சென்றபோது வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியர் வழங்கி, நல்லா படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

 

Ad


இந்த நிலையில் இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி காலை மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்புவந்து சத்தியா சென்றபோது பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும், மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தாயாருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவையும் வழங்கி மீண்டும் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தார்.


நக்கீரன் வெளிக்காட்டி, மாணவி சத்தியாவுக்கு அரசு உதவிகள் மட்டுமின்றி கொடையுள்ளம் கொண்ட ஏராளமானவர்களும் அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நக்கீரன் சார்பிலும் நன்றிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்