Skip to main content

“இசுலாமிய மக்களின் பாதுகாவலனாக நிற்கும் இயக்கம் திமுக” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
CM MKStalin says DMK stand as the protector of the islamic people

இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாது நபியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலாது நபி பண்டிகை நாளை (17.09.2024) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மீலாது நபி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். ‘உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்’ என எளியவர்களுக்காகப் பேசினார். ‘உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்’ எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். ‘கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்’ என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம்.

CM MKStalin says DMK stand as the protector of the islamic people

அவர் காட்டிய வழியில் வறியவர்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இசுலாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர். அன்பையும், ஈகையையும் சிறந்த குணங்களாக முன்னிறுத்திய அன்னாரது பிறந்தநாளை இசுலாமிய மக்கள் ஏற்றத்துடன் கொண்டாடி மகிழ்ந்திட 1969ஆம் ஆண்டே அரசு விடுமுறை அளித்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.

கடந்த 2001இல் அன்றைய அதிமுக ஆட்சி இதனை ரத்து செய்த நிலையில், 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு மீலாது நபியை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது. அவரது வழிநடக்கும், திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா போன்றவற்றால் அவர்களின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உரக்கக் குரல் கொடுத்து உறுதியாக உடன் நிற்கிறது. இசுலாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் மீண்டும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்