
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நாளை (05.04.2025) காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்குச் செல்கிறார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து ஊட்டிக்குச் செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (06.04.2025) இரவு சென்னை திரும்புகிறார். அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கவும், பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் நாளை மறுநாள் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.