மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை மூலகொத்தளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஜனவரி 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறைச்சென்று உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் சென்னை மூலகொத்தளம் பகுதியில் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடம் 32 லட்சம் செலவில் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் நினைவிடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்துள்ளார்.