நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் உடன் குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர். அப்போது பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஆகியவை நடைபெற்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எனப் பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தக் குடியரசு தினத்தில். அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட, அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்! அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.