Skip to main content

சென்னையில் மோசமான நிலையில் அரசு மாணவர் விடுதி! -ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவு!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

சென்னை சைதாப்பேட்டையில் தமிழக அரசால் நடத்தப்படும் எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், தமிழகத்தில் 1,324 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 24 மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 விடுதிகள் வாடகை கட்டிடங்களிலும், 21 விடுதிகள் சொந்தக் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.

chennai govt hostel inspection chennai high court order


இந்த விடுதிகளை முறையாக, சுகாதாரமான முறையில் பராமரிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அந்த மனுவில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்ததாகக் கூறியுள்ள மனுதாரர், தற்போது அந்த விடுதியில் அடிப்படை வசதி இல்லை எனவும், சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 

chennai govt hostel inspection chennai high court order


அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள்,‘சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலை அருகில் அமைந்துள்ள இந்த விடுதியை, சாலையில் இருந்து பார்த்தாலே, அதன் மோசமான நிலை தெரியும். இருந்தும், விடுதியை புதுப்பித்து பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’என தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.
 

பின்னர், இந்த விடுதியை நேரில் சென்று பார்வையிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்