
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைபிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியப்படியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் இது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் பதிலுக்கு பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பெண் பயணி ஒருவரிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அசோக் (வயது 20) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.