Skip to main content

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் உஷாரா இருங்க...

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
atm


கிராமங்களில் மட்டுமல்ல சென்னைப் போன்ற நகரங்களிலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்த தெரியாமல், பணம் எடுக்க வேண்டும் என்றால் அடுத்தவர்கள் உதவியை நாடுவோர் பலர் இருக்கின்றனர். அப்படி உதவி கேட்ட 52 வயதுடைய பெண்ணிடம் ரூபாய் 30 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றிருக்கிறார் வாலிபர் ஒருவர்.
 

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் மனைவி மீனா. 55 வயதான இவர் திங்கள்கிழமை சங்கராபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். 
 

தனக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கு இருந்த 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரிடம், ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.
 

அந்த நபர், ஏ.டி.எம். கார்டை மெஷினில் சொருகி, உங்க பேரு மீனாவா என்று கேட்டுள்ளார். ஆம் என்றவுடன், நம்பரை சொல்லுங்க என்றவுடன் ரகசிய எண்ணை சொல்லியுள்ளார் மீனா. ரகசிய எண்ணை போட்ட அந்த நபர், உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று மீனாவிடம் கூறி கார்டை கொடுத்துள்ளார்.
 

இதையடுத்து மீனா அந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். சிறிது தூரம் வந்ததும் மீனா தனது கையில் இருந்த கார்டை பார்த்து அதிர்ச்சியானார். அந்த ஏ.டி.எம். கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று, தனது கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரத்தை கேட்டார். அப்போது தனது கணக்கில் இருந்த 30 ஆயிரத்து 400 ரூபாய் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். 
 

தனக்கு பணம் எடுக்க தெரியாததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த வாலிபரிடம் உதவி கேட்டேன். அவர் மீதுதான் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் அறிவுரைப்படி சங்கராப்புரம் காவல்நிலையத்தில் மீனா புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 
 


 

சார்ந்த செய்திகள்