
தூத்துக்குடி நகரின் ஜார்ஜ் ரோடு, அண்ணா நகர், தாமோதர் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை நடந்துவந்தது. இதுகுறித்து டவுண் டி.எஸ்.பி.யான கணேஷன் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உட்பட தனிப்படையை அமர்த்தி, எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவின்படி 8 பேர் கொண்ட போலீஸ்படை பல்வேறு இடங்களில் விசாரணையை மேற்கொண்டனர்.
தனிப்படையின் விசாரணையில் 5 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ. 2.05 லட்சம் அளவிலான நகைகளை மீட்ட தனிப்படையினர், விசாரணையில் அந்தக் கும்பலின் தலைவன், தாமோதரன் நகரைச் சேர்ந்த செல்வ சதீஷ் என்ற செல்வத்தை (21) தேடினர். தீவிரத் தேடலில் ஜார்ஜ் ரோடு பகுதியில் தலைமறைவாக இருந்த செல்வத்தைக் கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து லேப்டேப், செல்ஃபோன், 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு கூட்டாளியான முனியசாமிபுரம் டேனியல்ராஜ் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவரவே அவருக்கும் வலை வீசினர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், டேனியல்ராஜ் காரில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது தனிப்படையினர் வளைத்திருக்கின்றனர். அதோடு அந்த நபரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் மதிப்பிலான நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்தத் தொடர் கொள்ளைக் கும்பலிடமிருந்து மொத்தம் மூன்றரை லட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் விசாரனையில், டேனியல் ராஜின் மீது மீளவிட்டான், தென்பாகம் காவல் நிலையம், நெல்லையின் பேட்டை போன்ற காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையிலிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களின் வேறு தொடர்பு பற்றிய விசாரணையும் நடந்துவருகிற நிலையில், திருட்டு நகைகளை வாங்கி தனியார் நிறுவனத்தில் அடகுவைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
தொடர் விசாரணையில், இவர்கள் பயன்படுத்திய கார், லாக்டவுண் காரணமாக பணிக்குச் செல்வதற்கு வசதியாக டேனியல் ராஜின் உறவினர் ஒருவர் பயன்படுத்திவந்திருக்கிறார். அந்தக் காரை உறவினருக்கே தெரியாமல் பயன்படுத்தி, காரில் கஞ்சா விற்றதும் தெரியவந்திருக்கிறது. டவுண் டி.எஸ்.பி. கணேஷனின் தனிப்படை, கஞ்சாவுடன் அந்தக் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.