திருச்சியில் மாநகரின் மையப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடி வளர்ந்து இருந்ததை கண்டு போலீஸ் அதிர்ச்சியடைந்த நிலையில் அதை கண்டுபிடித்து அகற்றிய நிலையில் தற்போது கரூர் மாவட்ட எல்லையில் சோளத்திற்கு நடுவே கஞ்சா செடி பயிரிட்டு இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மையிலம்பட்டியைச் சேர்ந்தவர் குத்தூஸ்ராவத் மகன் ஜாகிர் உசேன். இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சின்னதேவன்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தென்னை மரங்கள், சோளப்பயிர், மல்லிகை பூ ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அருணாச்சலத்தின் நிலத்திற்கு வந்த அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டர்.
அப்போது, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சோளம் பயிர்கள் நடுவே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ள கஞ்சா செடிகளின் மதிப்பு 50 லட்சம் முதல் 60 லட்ச ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த தோட்டத்தில் பணியாற்றி வந்த முருகன், தங்கவேல் ஆகியோரை கைது செய்த போலீசார், உரிமையாளர் ஜாகீர் உசேன், குத்தகைகாரர் அருணாச்சலம் ஆகியோர் தேடி வருகின்றனர்.
அருணாசலம் அந்த ஏரியா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. கடவூர் வடக்கு ஓன்றியத்தின் தலைவர். சமீபத்தில் பெங்களுரில் புதிய வீடு ஒன்று கட்டி கிரகபிரவேசம் செய்துள்ளார். தற்போது பெங்களுர் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.