Skip to main content

உதகை பேருந்து விபத்துக்கு தரமில்லாத பேருந்துகள் காரணம் இல்லை: விஜயபாஸ்கர்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018


கடந்த 14ஆம் தேதி உதகை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊட்டி எம்.பி.அர்ஜூனன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கினர்.

அதில், லேசான காயமடைந்தவர்களான பாலச்சந்தர், மாரிமுத்து, சுகன்யா ஆகிய 3 பேருக்கு தலா ரூ.25,000 பலத்த காயமடைந்தவர்களான நமட்சியவாயம், கணேசன், ராணி, நடராஜ், ஆனந்தன் ஆகிய 5 பேருக்கு ரூ.2 லட்சமும், தண்டு வடம் பாதிக்கப்பட்ட சாந்தி என்பவருக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரத்திற்கு நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

முதல்வர் நிவாரண நிதி மட்டுமின்றி போக்குவரத்து கழகம் சார்பில் காப்பீடு மூலம் உடனே காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முறை முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதி தவிர போக்குவரத்து கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ.2.50 லட்சம், 7 நபருக்கு தலா 5 லட்சம் ரூபாய் என ரூ. 40 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் வரும் திங்கட்கிழமை ஊட்டியில் வழங்கப்படவுள்ளது.

விபத்துக்கு தரமில்லாத பேருந்துகள் காரணம் இல்லை. போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. சாலை பாதுகாப்பிற்கு 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்