கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்ளே அறநிலையத்துறைக்கு உட்பட்ட தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. பிரமோற்சவம் நடத்துவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள கருடாழ்வார் சன்னதி முன்பு சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தியும் தடைபட்டுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்த வேண்டி 108 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
முன்னதாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் அகல் விளக்கு ஏற்ற நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அனுமதி மறுத்த நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ஜெமினி ராதா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்று கருடாழ்வார் சன்னதி முன்பு அகல் விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர். பொது தீட்சிதர்கள் சார்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் அமைதியான முறையில் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் வழிபாடு மேற்கொண்ட தெய்வீக பக்தர்கள் பேரவை அமைப்பினர் நடராஜ பெருமானை வழிபாடு செய்து சென்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெய்வீக பக்தர் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா, ''சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் தீட்சிதர்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை ஏற்றி சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளோம். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசின் ஆணைப்படி கனக சபை மீது ஏறி வழிபட பணம் வசூலிக்க கூடாது. அதனை மீறி தீட்சிதர்கள் ஆணவப்போக்குடன் பக்தர்களிடம் ஒரு நபருக்கு ரூ 200 முதல் ரூ 500 வரை வசூலித்து வருகின்றனர்.
ஒரு நாளைக்கு தற்போது 50 ஆயிரம் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள் பக்தர்கள் செலுத்தும் பணம் குறித்து கணக்கு காட்ட மறுக்கிறார்கள். மேலும் தீட்சிதர்கள் கடந்த 400 ஆண்டுகளாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வந்த பிரம்மோற்சவத்தை தடை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே தீட்சிதர்கள் சைவ வைணவம் பார்க்காமல் அரியும் சிவனும் ஒன்றே எனக் கருதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.
இந்நிகழ்வில் ஆன்மீக பக்தர் ஜெயசீலா தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகி சாம்பமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் இன்று காலை முதல் நடராஜர் கோவில் வளாகத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.