உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே புத்தாண்டை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை செய்வதற்காக காவல்துறை சார்பில் சோதனச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்குச் செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில், புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. வேளாங்கண்ணியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் தேவாலயத்திற்கு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றங்களைத் தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் அப்பகுதிகளில் வெறிச்சோடி காணப்படுகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.