
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிட்ட 15 மாணவ மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நல்லாகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் கூட்டாஞ்சோறு சமைத்துச் சாப்பிட முடிவு செய்தனர். இதற்காக ஒன்று சேர்ந்து நூடுல்ஸ் சமைக்கலாம் என முடிவெடுத்து அவரவர் வீடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மூலம் நூடுல்ஸ் சமைத்து உண்டனர். அப்பொழுது உணவுக்கான பொருட்களை கொண்டு வந்த சிறுவர்களில் ஒருவன் களைக்கொல்லி பூச்சி மருந்தை நல்லெண்ணெய் என நினைத்துக் கொண்டு வந்த நிலையில், அதனைப் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதில் 15 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தற்பொழுது பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.