குமரி மாவட்டம் கீரிப்பாறை மலைப்பகுதியில் கரடி கடித்து தனியார் தோட்டம் மேலாளா் இரண்டு கண்களையும் இழந்தார்.
கீரிப்பாறையை அடுத்த மாறாமலையில் தனியாருக்கு சொந்தமான கிராம்பு தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இந்த தோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் சீசன் காலங்கள் மற்றும் அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தும் வேலை செய்து வருகின்றனா். இதில் ஞானசேகரன் என்பவா் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு அங்கே தங்கிருந்து ஓரு தோட்டத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இன்று காலை 6 மணிக்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களை கண்காணிக்க தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தோட்டத்துக்குள் நிற்கும் மங்கூஸ் மரங்களில் இருந்து கீழே விழும் மங்கூஸ் பழங்களை சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த 6 கரடிகள் ஞானசேகரை துரத்தியது.
இதனால் உயிருக்கு பயந்து ஞானசேகரன் கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இரண்டு கரடிகள் கடித்து குதறியதில் ஞானசேகரனின் இரண்டு கண்களும் காயமடைந்து வெளியே தொங்கியது. உடனே மற்ற தொழிலாளிகள் ஓடி வந்து கரடியை துரத்தி விட்டு ஞானசேகரனை காப்பாற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிட்சைக்காக சோ்த்துள்ளனா். இந்த சம்பவத்தால் அங்குள்ள தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.