
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக டாஸ்மாக் ஊழலை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், ரூ.1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்ற வாசகத்துடன் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில், “1000 ரூபாய் கொடுத்தது போல் கொடுத்து 1000 கோடி அமுக்கிய ‘அந்த தியாகி யார்?’” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.