
சென்னையில் அதிமுக நிர்வாகியும், மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டுகள் தொடர்பாக சோதனை நடைபெற்றது. இதில் அதிமுக இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளராகவும், பா.வளர்மதியின் உதவியாளராகவும் இருந்த வெற்றிவேல் என்பவரது வீட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையைத் தொடங்கினர்.
நேற்று மாலை 5 மணி அளவில் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற சோதனை இன்று காலை 6.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்தச் சோதனையில் 11.80 லட்சம் ரூபாய் பணமும், அதேபோல காண்ட்ராக்ட் முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் முழுமையாக விசாரணை நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு சம்மன் கொடுத்து மேலும் முழுமையாக வெற்றிவேலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.