தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பீகார் மாநில அதிகாரிகள் குழுவும் தமிழகத்தில் ஆய்வு செய்து இது குறித்து விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனை தான் தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டு பொருளாதாரம் சரிந்து விடும் என்று இப்பொழுது முதலமைச்சர் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகளில் அவர்கள் தான் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலைகள் கூட்டமைப்பு வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனச் சொல்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி ஆகியோர் என்ன சொன்னார்கள் என்பதை அண்ணாமலை கோடிட்டு காட்டியுள்ளார். அதற்காக அவர் மீது வழக்கா? பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்ற கதை? மாநிலத் தலைவரை தொட்டால் தமிழ்நாடு தாங்காது. அதனால் எச்சரிக்கிறேன்” என்றார்.
பீகார் மாநிலத்தில் உங்கள் கூட்டணி ஆட்சி இருந்த பொழுது வேலை வாய்ப்பு வழங்கப்படாததால் மக்கள் இங்கு வருகின்றார்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “தமிழர்கள் டெல்லியிலும் கர்நாடகத்திலும் வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கானோர் உள்ளார்கள். தமிழகத்தில் வேலை கிடைக்காததால் தான் அங்கு சென்றார்களா? என்ன கேள்வி இது? அவரவர் நாடு எங்கு வேண்டுமானாலும் போகலாம். தமிழன் வேலை செய்வது இல்லை” எனக் கூறியுள்ளார்.