Skip to main content

செந்தில் பாலாஜியின் சகோதரர் விசாரணைக்காக அழைப்பு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Senthil Balaji's brother calls for investigation

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அமலாக்கத்துறை தரப்பிலிருந்து அவரை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜரானார். 

 

இந்த விசாரணையில், நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது எனக் கேட்டார். காலை தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அமலாக்கத்துறையினர் நடந்து கொண்ட விதம் ஆகியவை குறித்து அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார். இதன்பின் அமலாக்கத்துறை கொடுத்த மனு நகல் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினர் கொடுத்த மனு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினார். அதனையடுத்து மனுவை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தினார். 

 

இதனைத் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டதால் மீண்டும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். விசாரணை தொடர்வதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வாதிட்டனர். வழக்கில் தொடர்புடைய தொகை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையின் போது தங்களுக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் கூறினர்.  

 

விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அமலாக்கத்துறை ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாசித்துக் காண்பித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார். 

 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஒரு நபர் கைது செய்யப்படும் போது அவரது உறவுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுவது அவசியமாக இருக்கிறது. அப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை என செந்தில் பாலாஜியின் மனைவி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த அமலாக்கத்துறையினர் தாங்கள் முறைப்படி தகவல் தெரிவித்ததாகவும், குறிப்பாக அவரது சகோதரர் அஷோக் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அஷோக் குமார் நேரில் வந்து ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.