Skip to main content

“ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” - முத்தரசன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

“Governor Ravi? Online Rummy?” - Mutharasan

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

 

அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது. இந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் ரவி என்பவர் யாரென்பதே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் நமக்குக் கிடையாது. ஆனாலும் இந்த மாநிலத்தின் ஆளுநர் அவர். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். சம்பளத்திற்காக நியமிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நமது வரிப்பணத்தைத்தான் மாநில அரசு சம்பளமாகக் கொடுக்கிறது. அவர் தங்கி இருக்கும் மாளிகைக்குத் தேவையான பணிகள் அனைத்தையும் மேற்கொள்வது மாநில அரசு. அவருக்கு உரியப் பாதுகாப்பை வழங்குவதும் தமிழக அரசுதான்.

 

இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் கையெழுத்துப் போடமாட்டேன் என அடம் பிடிக்கும் ஆளுநராக ரவி இங்கே இருக்கிறார்.

 

ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான பணத்தை இழக்கிறார்கள். கடன் தொல்லையால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய உத்தியோகங்களில் இருப்பவர்கள். படித்த பட்டதாரிகள். வெளியில் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எனக்குத் தெரியாது. 

 

“Governor Ravi? Online Rummy?” - Mutharasan

 

சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அவசர சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். நிரந்தர தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. பல மாதங்களுக்குப் பிறகு அரசிடம் விளக்கம் கேட்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அரசு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறது. அதன் பின் ஆளுநர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மாநிலத்தின் முதல்வரும் நேரில் சந்தித்து மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கேட்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. 

 

அவர் யாரையும் மதிக்காமல் சூதாட்டத்தை நடத்துபவர்கள் 9 பேரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்துப் பேசுகிறார். இதற்கு என்ன காரணம். தமிழகத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து சாக வேண்டும். ஆளுநர் அவர்களுடன் உறவாக இருப்பார் என்றால் இந்தக் கள்ள உறவிற்கு என்ன பெயர். இந்தக் கள்ள உறவை ஆளுநர் மேற்கொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

முன்னதாக மாநிலச் செயலாளர் முத்தரசன் பேரணியின்போது “ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” என முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணியில் ஈடுபட்ட 4000த்திற்கும் அதிகமானோர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றிச் சென்று சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுலை எதிர்த்து நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்..” - பினராயி விஜயன்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

"We will field a candidate against Rahul." - Pinarayi Vijayan

 

தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் எனும் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்றாக காங்கிரஸ் கட்சி தேர்தல் நடந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணியின்படி மாநில கட்சிகளுடன் சுமுக உறவை கையாளாமல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையான போக்கு கடைபிடித்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ‘ராகுல் பா.ஜ.க.வை எதிர்த்து போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

கேரளா மாநிலம், திருச்சூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; 2024 தேர்தல் களத்தில் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடப் போகிறாரா அல்லது இடதுசாரிகளை எதிர்த்து போராடப் போகிறாரா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். கேரளத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் நினைத்தால் ராகுலை எதிர்த்து வயநாடு தொகுதியில் எங்கள் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சிதம்பரத்தில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

 all-party meeting decided to struggle against the police in Chithambaram

 

சிதம்பரம் வடுகநாதன் திரையரங்கில் கடந்த 17-ந்தேதி இரவு சிரஞ்சீவி (29) சகோதரர்கள் பழனிச்சாமி, ராமராஜன், அவரது தாயார், அண்ணி, தங்கை மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவியிடம் குடும்பத்தினர் முன்னிலையில் மது அருந்தி வந்தியா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி, ராமராஜன் ஆகியோரை கட்டை மற்றும் அங்கிருந்த பேரிகேட் பைப்புகளால் அடித்ததில் சிரஞ்சீவியின் மண்டை உடைக்கப்பட்டு 9 தையல்கள் போடப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்ல ராமராஜனின் 18 ஆயிரம் விலை உள்ள செல்போன் நொறுங்கி உள்ளது. சிரஞ்சீவியின் ஸ்மார்ட் வாட்சும், பாக்கெட்டில் இருந்த 1500 ரூபாயும் தொலைந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, திரையரங்கின் மேலாளர் அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்நிலைய ஜாமீனில் விட்டுவிட்டனர்.

 

காவல்துறையின் இந்த செயலை கண்டித்து சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ராஜா, தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார்.

 

இதில் சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுபினர் வாஞ்சிநாதன், சித்ரா, நகர்குழு சங்கமேஸ்வரன், சின்னையன்., இந்திய கம்யூ கட்சி தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், செயல் தலைவர் தில்லை கோ.குமார் திராவிடர் கழகம் ஆர்.செல்வரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்.கே.குமரன், மனித நேய மக்கள் கட்சி ஷாகுல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திரையரங்கு ஊழியர்களின் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் இதற்கு காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேசினர்.

 

பின்னர் திரையரங்கிற்கு வந்தவர்களை கொடூரமாக தாக்கிய ஊழியர்கள் மீது மட்டுமல்லாமல், நடந்த தாக்குதலை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்ட தியேட்டர் மேலாளர் வடுகநாதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்வது போல நாடகமாடி, குற்றவாளிகளை காவல் நிலையத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, இரவே ரிமாண்டுக்கு அனுப்புவதாக சொல்லி குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ள சிதம்பரம் நகர காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். வாலிபர் சிரஞ்சீவியை தலையில் கொடூரமாக தாக்கியதற்கான அரசியல் அமைப்புச்சட்டம்  326 மற்றும் அவர்களது பொருட்களை பிடுங்கியதற்காக 395 ஆகிய பிரிவுகளைச் சேர்த்திட வேண்டும்.  தாக்குதலுக்குள்ளாகி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிரஞ்சீவிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இழந்த பொருளை மீட்டு தருவது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய இழப்பீட்டையும் கொடுத்திட ஆவண செய்ய வேண்டும்.

 

திரையரங்கில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த சம்பவத்தில் காவல்துறையின் தவறான நடவடிக்கையை கண்டித்து  24 ந்தேதி சிதம்பரம் நகர காவல் நிலையத்தின் முன்னால் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்