Skip to main content
Breaking News
Breaking

“அ.தி.மு.க. அரசின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம்!" -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
dmk

 

 

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (14.09.2020) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், "இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்ச்சியாக, மறைந்த தலைவர்களுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் குடியரசு தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

dmk

 

 

அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நான் எழுந்து சபாநாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன். இங்கு பலரது மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ - மாணவிகள், தற்கொலை செய்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

 

எனவே இந்த இரங்கல் தீர்மானத்தில் அவர்களுடைய பெயர்களையும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.

 

இன்னும் 2 நாட்கள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது என்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்திருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். அதன்படி நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் மட்டும்தான் சபை நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், 'இந்த இரண்டு நாட்கள் போதாது, நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே அவை குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், கருத்துகளை எடுத்துச்சொல்ல வேண்டும்' என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

 

ஏற்கனவே 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும், தனித் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அளித்திருக்கிறோம். தொடர்ந்து மேலும் பல தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கோரி நோட்டீஸ் தந்து கொண்டு இருக்கிறோம். எப்படி இந்த 2 நாட்களில் அவற்றையெல்லாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முக்கியமாக நீட் பிரச்சினை; அதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமையைப் பற்றி எல்லாம் பேசவேண்டும். அடுத்து புதிய கல்விக் கொள்கை; அதேபோல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை; இவை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெறவேண்டும். எங்களுடைய கருத்துகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்று, கவன ஈர்ப்புத் தீர்மானங்களாக எடுத்துக் கொள்ளக்கோரி நோட்டீஸ் அளித்து இருக்கிறோம்.

 

இதைத் தவிர்த்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்த 2 நாட்களில் அவற்றை எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது " என்றார். 

 

அப்போது, "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றி உள்ளார்கள். சட்டமன்றத்திலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதிலேயும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு நாடகம்; மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம். ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட இதற்காக முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ டெல்லிக்குச் சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ இதுகுறித்து வலியுறுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு; போதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆகவே இது உண்மையிலேயே கூனிக்குறுகி போயிருக்கக்கூடிய அடிமை ஆட்சியாக; மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்றார் மு.க.ஸ்டாலின்

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

அதிமுக திமுக காரசார விவாதம்; வாக்குவாதத்தில் முடிந்த நகர் மன்ற கூட்டம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
DMK AIADMK political debate in Kallakurichi Municipal Council meeting

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை கண்ட சேர்மன் சுப்பராயலு  வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு, “கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என்று கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்களும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க...” என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி  பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.