Skip to main content

‘பாஜகவில் இணைகிறாரா சம்பாய் சோரன்?’ - ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு!

Published on 18/08/2024 | Edited on 18/08/2024
Is Sambhai Soran joining BJP 

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.

Is Sambhai Soran joining BJP 

மற்றொருபுறம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி (28.06.2024) தான் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரபரப்பான சூழலில் தான் முதல்வர் சம்பாய் சோரன் அப்போதைய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதே சமயம் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி (04.07.2024) பதவியேற்றார்.

இத்தகைய சூழலில் தான் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ சட்டமன்றக் கூட்டத்தில் நான் கனத்த மனதுடன் சொன்னேன் ‘என் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது." இதில் எனக்கு மூன்று விருப்பங்கள் இருந்தன. முதலாவதாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. இரண்டாவதாகச் சொந்தமாக அமைப்பை (கட்சி) நிறுவுவது. மூன்றாவதாக, இந்தப் பாதையில் யாரேனும் துணை இருந்தால், அவருடன் மேலும் பயணிக்க வேண்டும். மேலும்  எனக்கு முன்பாக எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. கட்சியில் அவமானப்படுத்தப்பட்டேன். கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு மீதும் பல்வேறு  குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள சம்பாய் சோரன் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்