Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்; இ.பி.எஸ். விளக்கம்!

Published on 10/11/2024 | Edited on 10/11/2024
EPS Explanation on CM MK Stalin Strong criticism

விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (10.11.2024) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருட்கள் அரங்கம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் ஆய்வு செய்தார். பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர், ''எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார் மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக உளறி இருக்கிறார்.

அதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்வார்கள். எனவே இதை மாற்றி பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்று தான் இப்பொழுது சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி'' என கடுமையாக விமர்ச்சித்திருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் பேசுகையில், “சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவை இதுவரை திமுக அரசு திறக்கவில்லை. அதிமுக ஆட்சியின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறும் போது அந்த நீரை நீர் ஏற்றி மூலமாக வறண்ட எரிகளுக்கு நீர் நிரப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நான் அடிக்கல் நாட்டி, அதற்கான முதற்கட்ட பணி முடிக்கப்பட்டு 6 ஏரிகளுக்கு நீர் நிரப்புகின்ற திட்டத்தைத் துவக்கி வைத்தேன். இந்த அரசு பொறுப்பேற்று 42 மாத காலம் ஆகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்திற்காக இந்த  திட்டம் முழுமை பெறவில்லை. முடக்கி வைத்துள்ளனர். அத்திக்கடவு அவினாசி திட்டம் கிடப்பில் தான் உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காலத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர்.

இதனால் விவசாயிகள் அச்சத்தில் உறங்கிப் போயிருந்தார்கள். டெல்டா மாவட்ட செய்திகள் தன்னுடைய நிலம் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்கு வயிற்றிலே பால் பார்ப்பது போல அதிமுக ஆட்சியில் இருக்கும் போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைக் கொண்டு வந்து அப்போதைய போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி  வைத்தது அதிமுக அரசு. இப்படிப் பல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக அதிமுக அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாகச் சிகிச்சை அளிக்கக் கூடிய திட்டமான மினி கிளினிக்குகளை ரத்து செய்தது திமுக அரசு. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும், விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்த அரசாங்கம் திமுக அரசு.

EPS Explanation on CM MK Stalin Strong criticism

தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் நடவு செய்கின்ற காலகட்டம். அதாவது விதை விதைக்கின்ற காலகட்டம். இந்த காலகட்டத்தில் உரம் தேவை. அந்த உரம் கூட விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. இது போன்ற அரசாங்கம் தான் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை எல்லாம் கொடுத்தார்கள். சுமார் 525 அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில் பத்து சதவீத அறிவிப்புகள் கூட நிறைவேற்ற முடியவில்லை. மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின் அதனை மறந்து பேசிக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்