Skip to main content

நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும்தான்; அவர்களில் ஒருவர்... -ராமதாஸ் உருக்கம்..!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
 ramadoss

 

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும் தான். அவர்களில் ஒருவர் பாஸ்வான் ஆவார் என்று கூறியுள்ளார்.

 

இராம்விலாஸ் பாஸ்வான் மறைவு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரும், எனது நண்பருமான இராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

 

இந்திய அரசியலில் நீண்ட அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவர். 50 ஆண்டுகளுக்கு முன் இராம் மனோகர் லோகியாவின் சம்யுக்த சோசலிஷக் கட்சியின் சார்பில் 1969-ஆம் ஆண்டில் பிகார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்துதான் அவரது அரசியல் பயணம் ஆரம்பமானது. நெருக்கடி நிலை கால ஒடுக்குமுறைகளும், அவற்றை அவர் எதிர்கொண்ட விதமும்தான் பாஸ்வானை தேசியத் தலைவராக மாற்றியது. அப்போதிலிருந்தே இந்திய அரசியலில் மாற்று அணியை அமைப்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த முயற்சியில் பல முறை பாஸ்வான் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

Ram Vilas Paswan

 

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். பிகாரில் தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக திகழ்ந்தவர். மக்களவைக்கு 8 முறையும், மாநிலங்களவைக்கு  இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989-ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். சமூகநீதியில் அக்கறை கொண்டவர்.

 

1990-ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இட ஒதுக்கீடு குறித்த பேச்சுகளை வி.பி.சிங் சார்பில் பாஸ்வான் தான் முன்னின்று நடத்தினார். 27% இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் வீட்டின் முன் எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இராம்விலாஸ் பாஸ்வானும் கலந்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசில், மத்திய கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெறுவதற்கான எனது முயற்சிகளுக்கு இராம் விலாஸ் பாஸ்வான் துணை நின்றார்.

 

தேசிய அரசியலில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக பாஸ்வான் திகழ்ந்தார். நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும் தான். அவர்களில் ஒருவர் பாஸ்வான் ஆவார். சென்னையில் 1992-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாடு தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும், டில்லியிலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஸ்வான் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை  குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

 

இராம்விலாஸ் பாஸ்வானை இழந்து வாடும் அவரது புதல்வர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், லோக் ஜனசக்தி கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்