Skip to main content

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை ;10 மணிநேரம் போராடி விரட்டிய வனத்துறை

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
A single elephant entered the town; the forest department fought for 10 hours to chase it away

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு தண்ணீரைத் தேடி கிராமத்துக்குள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாகவே யானைக் கூட்டங்கள், ஒற்றை யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம், செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை தண்ணீர் மற்றும் உணவைத் தேடி வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.

இதைக்கண்ட விவசாயிகள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த அந்த ஒற்றை யானை ஒவ்வொரு விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. மேலும் அங்கு விவசாயிகள் மக்காச்சோளம், முட்டைக்கோஸ் அதிக அளவில் பயிரிட்டிருந்தனர். அந்தத் தோட்டத்துக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.  சுமார் 10 மணி நேரம் அந்த ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கு போக்குக் காட்டி அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் ஒரு வழியாக அந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்.

இதேபோல் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் நடமாடி வருகிறது. உடல் நலம் குன்றியதால் தீவனம் ஏதும் உட்கொள்ளாமல் பகல் நேரங்களில் தரிசு நிலைகளில் சுற்றி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீருக்காக அந்த யானை கடந்த சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப் பகுதியில் சுற்றி வருகிறது. எனவே அந்தப் பகுதியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்