Skip to main content

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒ.தலைவர் துணைத் தலைவராக வெற்றி பெற்றவர்கள் 

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக மா.செ. குன்னம் ராஜேந்திரன், துணைத்தலைவராக முத்தமிழ் செல்வி வெற்றி பெற்றார். இதில் மொத்த இடங்கள் 8. திமுக 7 இடங்களும், அதிமுக ஒன்றையும் பெற்றதால் திமுக சுலபமாக வெற்றி பெற்றது.

 

ariyalur perambalur




பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் நாலு ஊராட்சி ஒன்றியங்கள். இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் குழு தலைவராக திமுகவை சேர்ந்த மீனம்மாள் தலைவராகவும், சாரதாதேவி துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர். வேப்பூர் ஒன்றியத்தில் பிரபா செல்லப்பிள்ளை தலைவராகவும், வி.சி.யைச் சேர்ந்த செல்வராணி துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். 

 

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த அனுக்கூர் ராமலிங்கம் தலைவராகவும், வெங்கனூர் ரங்கராஜ் துணைத் தலைவராகவும் வெற்றிபெற்றனர். ஆலத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 19 கவுன்சிலர்கள். இதில் திமுக 9-ம் அதிமுக 8ம், தேமுதிக 1 என வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவிக்கு திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் மாமாவான கொளக்காநத்தம் கிருஷ்ணமூர்த்தியும், அதிமுக சார்பில் ஒ.செ கர்ணனும் போட்டியிட்டனர். இதில் இருவரும் தலா 9 வாக்குகள் என சமமாக பெற்றதால் தேர்தல் அதிகாரிகள் இரு  வேட்பாளர்கள் ஒப்புதலுடன் குலுக்கல் சீட்டு முறையில் தலைவரை தேர்ந்தெடுத்தனர். அதில் திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தலைவராக வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.


 

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாவட்டத்தில் உள்ள திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக ஆறு, திமுக 11, தேமுதிக 1, பாமக 1, சுயேச்சை 2 என வெற்றிபெற்றனர். தலைவர் தேர்தலுக்கு திமுக சார்பில் சுமதியும், அதிமுக சார்பில் கலைவாணியும் போட்டியிட்டனர். இதில் திமுகவின் சுமதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சீதாலட்சுமி அறிவித்தார். இதனை கேட்ட அதிமுகவினர் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக  செயல்படுவதாகக் கூறி சாலை மறியலில் இறங்கினர். உடனே டிஎஸ்பி திருமேனி தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அதிமுகவினரிடம் தேர்தல் நேர்மையாக நடந்தது என எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. பிறகு அதிமுக கவுன்சிலர்கள் வெளியே வந்து தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாக எடுத்துக் கூறிய பிறகே சாலை மறியலை கைவிட்டு சென்றனர் அதிமுகவினர்.


 

ஆண்டிமடம் ஒன்றியத்தின் தலைவராக அதிமுக ஒ.செ. மருதமுத்துவும், துணை தலைவராக தேன்மொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியில் பாமக மா.செ. இரவிசங்கர் வெற்றிபெற்றார். த.பழூர் ஒன்றியத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றி பெற்றார். செந்துறை ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்ந்த தேன்மொழி தலைவராக வெற்றி பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மணிவேல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு அதிமுக ஒ.செ. சுரேஷ் தன் மனைவி தலைவராக தேர்வு செய்ய பெரும்பாடு பட்டார் முடியாமல் போனதால் ஒ.செ. சுரேஷ் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். 

 

சார்ந்த செய்திகள்