Conduct a caste-wise census along with population census says Ramadoss

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மக்கள் தொகையில் 150 கோடியை நோக்கி முதல் இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் 16 வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பு அறிவித்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Advertisment

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பானது 1872 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 ன் கீழ் இந்தியாவிற்கு எதிரான போர்கள் நடைபெற்ற காலங்களில் கூட இடைவிடாது தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில் கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும் என்றும் அது ஜாதி வாரி மக்கள் தொகையாக கணக்கெடுக்கப்படும் என்றும் முன்பு அறிவித்திருந்த மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு தற்போதைய அறிவிப்பின் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பது போல் காணப்படுகின்றது எனவே உடனடியாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.