Skip to main content

“பாஜக சொன்னது பொய் என்பது தற்போது உறுதியாகியுள்ளது” - நாராயணசாமி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

"Now it is confirmed that what BJP said is a lie" Narayanasamy

 

“வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்” என புதுச்சேரி மாநில  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வதந்தியை பரப்பும் கட்சியாக பா.ஜ.க செயல்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் பரப்புரை செய்கின்றது. இது பொய் பரப்புரை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை அம்மாநில முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். பொறுப்புள்ள கட்சித் தலைவர் தவறாக பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க கட்சி பொய் புரட்டை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படும் பா.ஜ.கவிற்கு தமிழக புதுச்சேரி மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், "ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் இன்னும் ஆளுநர்களும் துணை நிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் ஆளுநர்கள் தலையிடவோ தடை போடவோ கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் அங்கு மக்கள் குறை கேட்பு கூட்டத்தை நடத்த முடியுமா என சவால் விட்டேன் அதற்கு பதில் இல்லை .ஆனால் தெம்பு திராணி இல்லாத புதுச்சேரி ஆட்சியில் தான் துணை நிலை ஆளுநர்கள் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த முடியும். தனது அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகின்றார் என்று பார்க்காமல் முதலமைச்சர் நாற்காலி மட்டும் போதும் என்பதற்காக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுகின்றார்.

 

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஒற்றுமையாக இருக்கின்றோம் என முதல்வர் ரங்கசாமி கூறுகின்றார். ஆனால் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 'பா.ஜ.க ஆட்சி மலரும்' என்கின்றார்கள். முரண்பட்ட கருத்தோடு புதுச்சேரி தேசிய ஜனநாயக ஆட்சி செயல்படுகின்றது. மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க ஆட்சி அமைக்கப் போகின்றதா என்பதை முதல்வர் ரங்கசாமி தான் விளக்க வேண்டும். விதிமுறைகளை மீறி புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அதை சமமாக பிரித்துக் கொடுத்து லஞ்சத்தை பிரித்துக் கொடுப்பதிலும் முதல்வர் ரங்கசாமி ஜனநாயகத்தை காப்பாற்றி வருகின்றார்." என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்