கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து மாவட்ட கவுன்சிலர்கள், 30 ஒன்றிய கவுன்சிலர்கள், 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் போட்டியிடுவதற்குக் கடந்த நான்கு நாட்களாக வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நேற்று, பௌர்ணமி தினம் என்பதால் பல முக்கிய நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் திருநாவலூர் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் வசந்த வேல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜவேல், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுருவை திமுக சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் மணிகண்ணன். இவரது மனைவி கயல்விழி.
கயல்விழி மணிகண்ணன் குடியிருக்கும் பகுதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர் கிராமத்தில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏ. மணிகண்ணன் மனைவி கயல்விழி, நகர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் 1996 - 2001 கால கட்டத்தில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக பதவி வகித்தவர். அதன்மூலம் கிராமப்புறங்களில் பல அரிய திட்டங்களைச் செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேட்புமனு தாக்கலின் போது ஏராளமான திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.