திமுக ஆட்சியில் தீண்டாமை தீண்டப்படாமலேயே போய்விடும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் வைகுந்த ஏகாதசி தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதன் பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தீண்டாமை என்ற சூழ்நிலை நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியில் இருக்காது. சேலத்தில் கூட ஒரு கோவிலில் இப்படி தீண்டாமை இருந்து கோவில் பூட்டப்பட்ட நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி முதல்வர் நேரடியாகத் தலையிட்டு அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதியினரும் அங்கே இறை தரிசனம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இத்தகையை முறை இருந்ததைத் தெரிந்ததும் முதல்வரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கண்காணிப்பாளரும் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று அனைவரும் இறை தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆகவே தீண்டாமை என்பது இந்த ஆட்சியில் தீண்டாமலேயே போய்விடும்.
திருக்கோவில்களுக்குப் பட்டா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் அதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வழக்கின் முடிவு வரும் வரையில் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்க முடியாத சூழல் நிலவுகிறது” எனக் கூறினார்.