தொடர்ச்சியான ஊரடங்கும், முழுமையான ஊரடங்கும் பொதுமக்களுக்குப் பல்வேறு வகையிலும் சிக்கல்களை உருவாக்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் பொருளாதாரப் பிரச்சனை அதிகளவில் எதிரொலிக்கும் நிலையில், பணப் புழக்கமும் அவர்களிடம் இல்லாததால் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தருகிற நிவாரண உதவிகளைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்திருக்கும் கனிமொழி, "தமிழகத்தில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களைத் தயாரிக்கும் துறை, பொது முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளித்திருந்தும் தமிழகத்தில் இதற்கு நெருக்கடி நிலவுகிறது. இதனால், உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இதில் உடனடியாகத் தலையிட்டு தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.