Skip to main content

ஓ. பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் - ஜெயக்குமார் 

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

former minister talks about panneerselvam stands for erode east by election 

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்க, கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரை சந்திக்க செல்லும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அங்கு வருவதற்கு சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் கமலாலய வாசலில் சிறிது நேரம் காத்திருந்தோம். உடனே நாங்கள் யாருக்கோ காத்திருப்பது போல பரப்பி விட்டனர்.  இந்தியா ஒரு சுதந்திர நாடு. ஒருவர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எனவே  ஓ.பன்னீர்செல்வம் குஜராத் மட்டுமில்லை பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவர் அவ்வாறு செல்வதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரும் சிறப்புமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் எப்படி தன்னை அதிமுக என்று சொல்லிக்கொள்ள முடியும். அவர் அவ்வாறு சொல்வது சட்டப்படி தவறு. எனவே அதிமுகவை திமுகவின் பி டீமாக சிறுமைப்படுத்த தொந்தரவு கொடுக்கும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை மக்கள் சுயேட்சை வேட்பாளராகத்தான் கருதுவார்கள். அவர் ஏற்கனவே தன்னுடைய நிலையில் இருந்து கீழே சென்றுவிட்டார். இந்த இடைத்தேர்தலில் அவரது கதை முடியும். அவர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் நோட்டாவுக்கு கீழே சென்றுவிடுவார்.

 

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்து  இடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. திமுக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதே வேளையில் அதிமுக எழுச்சியுடன் காணப்படுகிறது. எனவே அரசின் மோசமான செயல்பாடுகளை எடுத்து சொல்லியும், அதிமுக அரசின் சாதனைகளை சொல்லியும் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். மேலும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாகவும் இந்த தேர்தல் அமையும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.