தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி. ரவீந்திரநாத் நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவர் அதிமுக கிடையாது. மக்களவையில் ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர் தகுதியை இழந்துவிட்டார். எனவே மக்களவை சபாநாயகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரது அங்கீகாரத்தைத் தடை செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்துள்ளார்.
சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் அதிமுகவாக இருக்கும் இபிஎஸ் தரப்பு வெற்றி பெற்றுள்ளது. மூன்று அமைப்புகளும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்துள்ளது. எனவே அவருக்கு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரம் வழங்கக்கூடாது. அப்படி வழங்கப்பட்டு இருந்தால் அது உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக சி.வி. சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளார்.