
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டியதோடு, ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 லட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில், கீரனூரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன. கொழுமன்கொண்டான் ஊராட்சியில் 100 வீடுகளுடன் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ் நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லூரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கு ஒட்டன் சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளது” என்று கூறினார்.