Skip to main content

தமிழகம் முழுக்க பட்டொளி வீசி பறந்த "கருப்பு கொடிகள்" 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
kkkk

 

தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப் பகுதிகள் அனைத்திலும் இன்று கருப்புக்கொடியாக காட்சியளித்தது. அந்த கருப்பு கொடிகள் மக்களின் வேதனையை துக்கமாகவும், ஆளும் அரசுகளுக்கு எதிர்ப்பாகவும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது.

 

மத்திய பா.ஜ.க. அரசு மத்திய மின்திருத்த சட்ட மசோதா 2020ஐ கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் மின்சாரம் தனியார் மயமாவதும், மின்சாரம் மாநில அரசின் உரிமையிலிருந்து பிரிக்கப்படுகிறது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் என இந்தியாவில் உள்ள பல கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இச்சட்ட மசோதாவை அறிவித்துவிட்டது. ஆகவே இதை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தியும்தான் இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாய நிலங்களில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம் நடைபெற்றது. 

 

இந்த போராட்டத்தை இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் அவைகளின் விவசாய சங்கங்கள் ஆதரவாக களம் இறங்கியது. ஈரோடு மாவட்டம் முழுக்க பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள், வீடுகள், மோட்டார் பம்ப் செட், கிணறுகள்  உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஈரோடு மாவட்ட தி.மு.க.செயலாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துச்சாமி தனது இல்லத்தின் முன் கட்சியினரோடு கருப்புக்கொடி காட்டி கோஷமிட்டார். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர், கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, அரச்சலூர், கவுந்தபாடி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுலியம்பட்டி, பவானிசாகர் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் முழுக்க பறிக்கப்படும், அதேபோல் மின்சாரத்தை பொதுப்பட்டியலில் இணைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த நடைமுறைபோல் விவசாயத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், இலவச மின்சாரம்  தொடர்பாக மத்திய மாநில அரசுகள் சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்  உள்ளிட்ட மூன்று அவசர சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும்" என்றார்கள்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, காங்கிரஸ், கொ.ம.தே.க, விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., உட்பட பல கட்சி நிர்வாகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு போலவே தமிழகம் முழுக்க ஆளும் அரசுகளை கண்டித்து கருப்பு கொடிகள் பறந்தது.

 

 

சார்ந்த செய்திகள்