இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிக்குமார். இவர் நேற்று (02.09.2024), சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், கேசவநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சுழி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காளிக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காளிக்குமாரின் உடல் இன்று (03.09.2024) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து, குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்கள், அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இதனை ஏற்காத காளிக்குமாரின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை டி.எஸ்.பி. காயத்ரி தடுக்க முயன்ற போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள், அவரின் தலை முடியை இழுத்துப் பிடித்து கீழே சாய்க்க முற்பட்டனர். உடனடியாக மற்ற போலீசார், அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின்னர், திருச்சுழி டி.எஸ்.பி. காயத்ரி இந்த வழக்கு தொடர்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகக் கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்துத் தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த திமுக அரசுக்கும், முதல்வருக்கும் கடும் கண்டனம். அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்குத் தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்படத் தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.