தி.மு.கவுக்கும், அ.திமு.க.வுக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (13-11-24) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அ.தி.மு.க தவறுதலாக விமர்சனம் செய்வதில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நிலை மறந்து என்னை விமர்சனம் செய்கிறார்.ஆளுங்கட்சியினர், எங்களைப் பற்றி தவறாகப் பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் எப்படி பேசினார் என அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க அரசு வேண்டுமென்றே முடக்குகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காரணத்திற்காகவே, இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.