
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எதுவும் தராமல் 8 தொகுதியிலும் திமுகவே போட்டியிடுகிறது.

திருவண்ணாமலை – எ.வ.வேலு: இவர் திமுக தெற்கு மா.செ., முன்னாள் அமைச்சர். இந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்பு தண்டராம்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி: முன்னாள் அமைச்சரான இவர், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுவில் உள்ளார். மூன்றாவது முறையாக கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த தொகுதியில் ஒருமுறை தோல்வியும், ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார். 2011க்கு முன்பு வரை திருவண்ணாமலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றுவந்தார்.

செங்கம் (தனி) – மு.பெ.கிரி: மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக இருந்தவர். தனித் தொகுதியான செங்கத்தில் 2016ல் நின்று வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன்: துரிஞ்சாபுரம் ஒ.செவான இவர், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரின் தந்தை திருவேங்கடம், இதே தொகுதியில் சிலமுறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பி திக்குமுக்காட வைத்தவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

போளுர் – கே.வி.சேகரன்: 2016ல் இதே தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். இரண்டாவது முறையாக அதேதொகுதியில் நிற்க, மீண்டும் அவருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல சர்ச்சைகளில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்துக் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆரணி – அன்பழகன்: ஆரணி கிழக்கு ஒ.செவாக உள்ளார். அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை எதிர்த்து அன்பழகன் களமிறக்கப்பட்டுள்ளார்.

வந்தவாசி (தனி) – அம்பேத்குமார்: கட்சியின் மாணவரணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். 2016ல் இதே வந்தவாசி தொகுதியில் நின்று வெற்றிபெற்றுள்ளார். இரண்டாவது முறையாக, அதே தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்.
செய்யார் – ஜோதி: செய்யார் ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். முதல் முறையாக சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், அதிமுகவுடன் திமுக 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. 2 தொகுதியில் திமுக – பாமக எனவும் ஒரு தொகுதியில் திமுக – பாஜக எனவும் தேர்தல் களம் இருக்கிறது.