Skip to main content

"கொடுப்பது வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் கொடுக்கவில்லை" - அசரவைத்த திண்டுக்கல் சீனிவாசனின் பதில்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
Dindigul Srinivasan replying to a reporter's question, "Why didn't you give a cell phone as said in the 2016 AIADMK election manifesto?"

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை  நிறைவேற்றக் கோரி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் உள்ள  அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வீட்டின் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

 

பின்னர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “2016 பொதுத் தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஏன் வழங்கவில்லை?" என நிருபர் கேட்ட கேள்விக்கு, "பொது மக்கள் மத்தியில் விசாரணை செய்து பார்த்ததில், செல்போன் தேவை இல்லை என்பதால் வழங்கவில்லை. அதேபோல் தமிழகத்தில் நூற்றுக்கு 95 சதவீதம் பேர் செல்போன் வைத்திருந்த காரணத்தினால் கொடுப்பது வீணாகக் கூடாது என்பதால்  நாங்கள் வழங்கவில்லை" எனக் கூறினார்.

 

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னிலைப்படுத்தாததின் காரணமாகத்தான் அதிமுக தோல்வி கண்டது எனக் கூறினார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, "இதற்கான பதிலை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்னிடம் கேட்கக் கூடாது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்