Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; செல்வப்பெருந்தகையை விசாரிக்காதது ஏன்? - ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை!

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
 ANS Prasad Statement

பகுஜன் சமாஜ் கட்சியினர் சந்தேகம் எழுப்பியும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை காவல்துறை இன்னும் விசாரிக்காதது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகமே அதிர்ச்சி அடைந்த இந்த அரசியல் படுகொலை நடந்து கிட்டத்தட்ட 2 மாதம் முடியவுள்ள நிலையில் 90 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் குற்ற பத்திரிகையை தயார் செய்யும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக வேகமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலை நடந்த உடனே பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த அரசியல் படுகொலைக்கு பின்னணியில் இருந்தது யார்? இந்த அரசியல் படுகொலை சதியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் போர்வையில் உள்ள சமூக விரோதிகள் உள்ளிட்ட அனைவரையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓங்கி குரல் கொடுத்தன.

காவல்துறை விசாரணையில் கொலைக்கு காரணமான பிரபல ரவுடிகள், கூலிப்படையினர் ஒரு சில அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கொலை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டாலும், இந்த படு பயங்கரமான கொலை குற்றத்திற்கு பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? காரணம் என்ன? என்பதை முழுமையாக விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை இன்னும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. கொலைக்கு காரணமான அத்தனை சதிகாரர்களையும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்  ஆர்ம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வந்து அவர் மனைவி உட்பட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வெளியில் வந்தவுடன் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்கு இதுவரை காவல்துறை தரப்பில் விளக்கம் இல்லை.

மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் குறிப்பிட்டார்.அதைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள், இந்தப் படுகொலை குறித்து பேசும்போது நியாயமான விசாரணை நடைபெறும், கொலை குற்றவாளிகள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார்.

 ANS Prasad Statement

தமிழக முதல்வர் அவர்களும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர் தலைமையில் நடந்து வரும் இந்த விசாரணைசரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று எங்களுடைய மாநில தலைவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

மேலும் முதலில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டாஸில் கைது செய்யப்படுவர் என்றும்; குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் செல்போன் உரையாடல்கள், சிசிடிவி காட்சிகளின் பதிவுகள்முதலியவற்றை துரிதமாக ஆராய்வதாகவும்,குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்கள் கூறிய வாக்குமூலம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் என பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து வருவதாகவும் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு தண்டனை பெற்று தரும் விதமாக இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்து வருவதாகவும், கண்டிப்பாக இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதும் சில சந்தேகங்கள் இருப்பதாக என்னிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சில வாரங்களுக்கு முன்பாக என்னிடம் தெரிவித்தபோது, உடனடியாக செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சந்தேகப்படும் அனைவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுங்கள் என்று தெரிவித்தேன். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்குழுவில் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தி சில நிர்வாகிகள் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்திலும் இந்த கொலை குற்றத்துக்கான சதி செயலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டும் இதுவரை அவரை சென்னை மாநகர காவல்துறை விசாரணை செய்யாதது ஏன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

பாஜக மாநில துணைத்தலைவர், உயர் நீதிமன்ற சென்னை பார் கவுன்சிலின் உறுப்பினர் பால் கனகராஜ் அவர்களின் மீது பகுஜன் சமாஜ் கட்சியினர் சந்தேகம் எழுப்பிய போது,வடசென்னை பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளை வாங்கி மக்கள் ஆதரவு பெற்றஅவரை காவல்துறையினர் சம்மன் கொடுத்து விசாரணை செய்தனர். அவரும் அந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.

ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மீது அத்தகைய குற்றச்சாட்டு அக்கட்சியினரால் எழுப்பப்படும் பொழுதுஅவருக்கு சம்மன் கொடுத்து சென்னை மாநகர காவல் துறை விசாரிக்காதது ஏன்? செல்வப் பெருந்தகை அவர்களை விசாரிப்பதற்கு தமிழக காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

தமிழக பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜ் அவர்களுக்கு ஒரு நியாயம் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தைக்கு ஒரு நியாயமா?. தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தமிழக காவல்துறைக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கிதமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்தினரால், இந்த வழக்கில் இவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று சொல்லப்படுகின்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் காவல்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இனி தமிழகத்தில் அரசியல் படுகொலைகளுக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் இந்த வழக்கில் காவல்துறை விசாரணை முன்னுதாரணமாக அமைய வேண்டும். இதில் காவல்துறைக்கோ, இந்த அரசுக்கோ ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்