பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
11 சுற்றுகளுடன் நிறைவடைந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 19 காளைகளைப் பிடித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளைப் பிடித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 2வது இடத்தையும், 14 காளைகளை பிடித்து திருப்புவனம் முரளிதரன் 3 வது இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மிகவும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டாக பாலமேடு ஜல்லிக்கட்டு இருக்கிறது. போட்டியானத இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. 1,100 காளைகள் 900 வீரர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இருக்கின்றனர்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட இருக்கிறது. நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை விட பாலமேடு ஜல்லிக்கட்டு களம் நீளமானது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என அதிகப்படியான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
Published on 15/01/2025 | Edited on 15/01/2025